Wednesday, May 26, 2021

பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களோடு பணிகள் நிமித்தம் பழக நேரி்ட்டது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அடியாழத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தான் இன்ன சாதி, நம் முன் உள்ளவர் என்ன சாதி என தோண்டிப் பார்க்கத் துடிக்கும் ஆர்வம். அங்கு பணியாற்றிய காலங்களில் பலருக்கும் ஆர்வம் இருந்தாலும் அதை வெளிப்படையாகக் கேட்க கூசி நின்றார்கள்.

அப்படியொரு பணி நாகரீகம் அங்கிருந்தது. தன்னார்வ நிறுவனங்களில் ஒரு மனிதனின் திறமைதான் முன்னுக்கு நிற்கும். இந்த பண்பு வளர்ந்து வரும் எல்லா நிறுவனங்களிலும் உள்ளது.

எனது பணிக்காலத்தின் பாதி வயதை மேற்கண்ட வளர்ச்சி நிறுவனங்களில்தான் செலவளித்தேன். கடந்த 10 ஆண்டுகால அரசுப் பணியில் எல்லாமே தலைகீழ்தான் அலுவலகத்தில் பணிகள் தொடர்பாக நம்மோடு பணியாற்றுபவர்களிடம் பேச நேரிடுகையில்…… பணிகளை விரைந்து முடித்திட கொஞ்சம் குரல் உயர்த்துகையில் பேசுவர் உயர் அதிகாரியாக இருந்தாலும் அவர் என்ன சாதி என்ற ஆராய்ச்சி, பணியாளர்களால் நடத்தப்பட்டு கடைசியில் “அது அவனது சாதி புத்திஎன்று முடிக்கப்படுகிறது.

        ஒரு தனி மனிதனின் குணநலன்கள் எப்படி ஒரு சாதியின் குணமாக இருக்க முடியும்? சாதியின் அளவு கோலில் எப்படி ஒரு தனி மனிதனின் பழக்க வழக்கங்களைத் தீர்மானிக்க முடியும்?

        மேற்கண்ட கேள்விகளுடனேதான் நமது பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பணிகளில் காட்ட வேண்டிய அக்கறையை…. நம்மால் அடுத்தவருக்கு எந்தளவுக்கு உதவி செய்யப் போகிறோம் என்று காட்ட வேண்டிய ஆர்வத்தை, தனி நபரின் செயல்பாடுகளையும், பழக்க வழக்கத்தையும் பழிப்பதில் காட்டுவது எந்த வகையில் நியாயம்?

        “வணக்கம் சார்

                வணக்கம்

                நீங்க எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க

                ”………………”

                பரீட்சை எழுதித்தானா..?

                ”………………”

                கோட்டாவுலயா?

”………………”

                ரெகமெண்டேஷனா?

                ”………………”

                பணம் குடுத்தா

                ”………………”

 

                என்ன சார் ஒன்னும் பேசாம இருக்கிங்க…? ஒன்ணுமில்லாமல் எப்படி சார் வேலைக்கு வர முடியும்?

                தமிழ்நாட்டில் எந்தக்துறை அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தாலும் முதல் நாள் கேட்கப்படும் கேள்விகள் தான் மேற்கண்டவை.

        இட ஒதுக்கீடு, சிபாரிசு, லஞ்சம் இந்த மூன்றுமில்லாமல் தன் சுய முயற்சி கொண்டு ஒருவர் அரசுப் பணியில் அமர முடியாதா? அப்படியே ஒருவர் தன் முயற்சியில் வேலையில் சேர்ந்தாலும் அவரால் சுயமாக தனது சாதியின் பலமின்றி தனித்து செயல்பட முடியாதா…?

        பணித்தளங்களில் உருவாகும், உருவாக்கப்படும் நட்பு வட்டம் கூட சாதியின் அடிப்படையில்தான் உருவாகிறது. அரசுத் துறையில் பணியாற்றும் நபர்கள் சாதிகளை தங்களின் வசதிக்காக பல கூறகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

        பொருளாதார அடிப்படையில், உள்ளூர், உள் மாவட்டங்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒத்த நிலையில் இருக்கும் சாதிகள் எல்லாமே தங்கள் எல்லாம் ஒன்று என்று எண்ணுகிறார்கள்.

        “அண்ணாச்சி நமக்கு திருநெவேலி பக்கம் அம்பாசமுத்திரம்தான் சொந்த ஊரு. இங்க கோயம்புத்தூருல நீங்க எப்பிடி செல்வாக்கா இருக்கிங்களோ அதே செல்வாக்கு நமக்கும் இருக்கு. நாம ரெண்டு கம்யூனிட்டியும் ஒரே ஈகுவேல் கம்யூனிட்டிதான். பல எடங்கள்ல நம்ம ரெண்டு கம்யூனிட்டியும் சம்மந்தங்கூட பண்னியிருக்காங்க.“ என்று சொல்லி தனக்கான சாதி அடையாளத்தையும், தகுதியையும் உருவாக்கிக் கொள்ளும் அரசு அலுவலர்கள் அதிகம் உள்ளனர்.

        தான் செய்யும் தவறுகளையும், தனது பணி மீறல்களையும் மறைக்கும் ஓர் பேராயுதமாக சாதியை முன்னிருத்திக் கொள்கிறார்கள். அரசியல் அமைப்புகளில் தனது சாதிக்காரன் பெரிய பதவிகளில் இருந்தால் “மரியாதை நிமித்தம்சந்தித்து தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள்.

        சாதாரண கிராம நிர்வாகத்தில் தொடங்கும் சாதிப் பின்னல், வட்டாரம், மாவட்டம் மாநிலத்தையும் தாண்டி தேசிய அளவில் அரசுப் பணிகளோடு இழுத்துப் பின்னப்பட்டுள்ளது. இந்த பின்னல் தேசிய வளர்ச்சியை நூறாண்டுகளுக்கு பின் நோக்கி இழுத்துச் செல்கிறது.

        அரசு நிறுவனங்களுக்குள் சாதி புகுந்து உள்ளதா? சாதி பூசல்களுக்குள் அரசு நிறுவனங்கள் விழுந்து கிடக்கின்றனவா? எளிதில் விடைகாண முடியாமல் நீண்டு செல்லும் இந்த வினாவுக்குள்தான் இந்தியா என்ற மிகப்பெரிய துணைக்கண்டத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் சுருங்கிக் கிடக்கிறது.

        சாதிகள் பற்றிய பாகுபாடுகள், எல்லா சாதிகளும் தாங்கள்தான் உயர்ந்த சாதி என்று பறைசாற்ற வைக்கிறது. கிராமங்களில்தான் சாதி பார்த்து பழகுவார்கள் நகரங்கள் முன்னேறி விட்டன என்ற மாயையை உடைத்து ஹைதரபாத்தில் நிகழ்ந்த  சம்பவம் உலகிற்கு எடுத்துச் சொன்னது.

        கல்வி நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் சாதியத்தின் ஆதிக்கத்தின் கீழ்தான் கட்டுண்டு கிடக்கிறது. அரசாங்கப் பணிகளுக்காய் தங்களின் உழைப்பையும் அறிவையும் பயன்படுத்தி அரசுப்பணி கிடைத்து விட்டதே என்ற வெற்றிக்களிப்பால் அலுவலகம் வரும் இளைய தலைமுறையினரை பழமையும் சாதியும் பேசி அவர்களின் ஆர்வத்தை மழுங்கடிக்கும் பணியைச் செய்பவர்கள் யார்? 

        எந்தத் தகுதியுமின்றி சிபாரிசின் பேரில் அரசுத் துறைக்குள் நுழைந்து கொள்பவர்கள்…. கொடுக்கும் வேலையைச் செய்யாதவர்கள்,… செய்ய முடியாதவர்கள்…. லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள்….. ஊழல் செய்யும் உயர் அதிகாரிகளுக்கு ஊழியம் செய்பவர்கள்…… என்று நீண்டு செல்லும் நாசக் கிருமிகளால் நசுக்கப்படுகிறார்கள் புதிய பணியாளர்கள்.

        அலுவலகத்தில் தபால்களையும், கோப்புகளையும் மறைத்து வைப்பது, களப் பணிகளுக்கு செல்லவிடாமல் தடுப்பது, உயரதிகாரிகள் மூலம் நெருக்கடிகள் கொடுப்பது,  விளக்கம் கோரும் குறிப்பாணை கொடுப்பது, அரசாங்கப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள், ஏஜெண்டுகள் மூலம் அச்சுறுத்தல் தருவது, சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இழித்துரைப்பது, ஏளனம் செய்வது போன்ற காரியங்கள் செய்பவர்களே அரசு அலுவலகங்களில் அதிகாரம் பொருந்தியவர்களாக உள்ளார்கள்.

        பணிச் சுதந்திரமும் பாராட்டுகளுமே ஒருவனை சிறந்த நிர்வாகியாக மாற்றும் சக்தி பெற்றது. 2006-க்குப் பிறகான, ஆண்டுகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளின் மூலம் அரசுப் பணியில் சேர்ந்தவண்ணம் உள்ளார்கள்.

        தங்களுக்குக் கிடைத்த பல்வேறு வெளிநிறுவன வாய்ப்புகளையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு அரசுத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான் அதிகம்.

        கல்வி முடிந்த பின்பு தங்களின் வாழ்வாதாரத்திற்காய் சொற்ப ஊதியத்தில் தனியார் நிறுவனங்களில் பணி செய்த காலங்களில் கிடைத்த பாராட்டும், பணிச்சுதந்திரமும் இங்கும் கிடைக்கும் என நம்புகிறவர்களை, முதல்நாளே அவர்களின் ஆர்வத்தின் மீது ஆஸிட் ஊற்றும் பணியைத்தான் அரசாங்கத்தின் பல துறைகளின் பழுத்த பழங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

        அதிலும், சமுதாயத்தின் பின்தங்கிய, எளிய சாதிகளிலிருந்து பணிகளுக்கு வரும் நபர்களை சாதியைச் சொல்லிச் சொல்லியே சாகடிக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களைத் தொடர்ந்து காப்பாற்றுவதே நமது அரசாங்கங்களின் பணியாகிப் போகிறது.

        அரசு அலுவலகங்களில் நிரந்தரப் பணியாளர்கள் தற்காலிகப் பணியாளர்கள் என்ற இரு துருவங்களின் உரசலில் சாதியின் முழு அதிகாரமும் இணைந்து கொள்கிறது. இதில் ஒரு சாரார் நசுக்கப்படுவதும், ஒரு சாரார் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

        நிரந்தரப் பணியாளர்களின் பணி மாறுதல்களிலும் பதவி உயர்வுகளிலும் சாதியம் கடை பிடிக்கப்படுகிறது. மாவட்ட தலைநகரைத் தாண்டாத பணியாளர்களும், மாநிலம் முழுவதும் பந்தாடப்படும் பணியாளர்களும் வாங்கும் ஊதியம் ஒன்றுதான்.

        மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், வட்டார, வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தங்களது பணிக்காலம் முழுவதையும் கழித்துவிட்டு “எல்லைதாண்டாமல்” பதவி உயர்வும் பெற்று, எந்த பிக்கலும், பிடுங்கலும் இல்லாத பிரிவுகளில் பணியாற்றும் பலரின் உள்முகம் தேடிப்பாருங்கள். அவர் அந்த மாவட்டத்தில் அதிகாரம் செய்யும் சாதிக்காரராகவும், அதிகார மையங்களின் உறவினராகவும் இருப்பார்.

        ஆண்டுக்கு இரண்டு முறை மாவட்ட அளவில் சிறப்பாக, பணியாற்றிய பணியாளர்களுக்கு சிறந்த பணியாளர் விருது வழங்கப்படும். இந்த விருதுகளும், அதைப் பெறுபவர்களும் யார் என்பதைப் பொறுத்தே அவர் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை சாதிக்காரர் என்று புரிந்து கொள்ளலாம்.

        எந்தவொரு மனிதனும் பிறக்கும் போதே சாதிக் குணத்தோடு பிறப்பதில்லை. அவனை சாதியாகவும், மதமாககவும் மாற்றுவது சமூகமும், சமூகத்தை வழிநடத்தும் அரசும்தான். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு பரந்துபட்ட சிந்தனைகளை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பயிற்சிகள் தர வேண்டும்.

        அரசு நிறுவனங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. இதில் குறிப்பிட்ட பிரிவினர் ஆதிக்கம் செலுத்துவதை கடுமையான சட்டங்கள் கொண்டு தடுத்திட வேண்டும்.

Saturday, November 20, 2010

விடைதெரியாத கேள்விகள்-1

இந்தாண்டில் செப்டம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் எங்கள் பணியாளர்களை அழைத்துக் கொண்டு காந்தி அருங்காட்சியகம் சென்றேன். தேசத் தந்தையின் படங்களும் அவரது வாழ்க்கை வரலாறும், அருங்காட்சியம் முழுதும் விரவிக் கிடந்தன.
பணி நிமித்தமாய் மதுரைக்கு வந்த இந்த எட்டாண்டுகளில் பல முறை நான் காந்தி அருங்காட்சியகம் சென்று வந்துள்ளேன். சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களையும், தலைவர்களையும் அழைத்துச் செல்வதோடு, சுய உதவிக்குழுக்களை உருவாக்கும் பணியாளர்களையும் அழைத்துச் சென்றுள்ளேன்.
காந்தி அருங்காட்சியகம் செல்லத் தொடங்கிய பிறகே காந்தியின் சத்திய சோதனையையும், காந்தியின் வரலாறோடு இந்திய வரலாற்றையும் இணைத்துள்ள நள்ளிரவில் சுதந்திரம் என்ன நூலையும் வாசித்தேன்.
திராவிட இயக்கத்தின் அரசியல் பின்னணியில் உள்ள குடும்பத்தில் பிறந்து, பொதுவுடமைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வரும் நான் காந்தியைப் பற்றி அதிகம் படித்ததில்லை. காந்தியைப் படிக்கத் தூண்டியது. காந்தி அருங்காட்சியகம்தான். காந்தி என்ற மனிதர் தாயகம் தாண்டியும் உலகமெல்லாம் போற்றப்படுவதில் உள்ள அர்த்தம் எனக்குப் புரிந்தது.
காந்தி தொடர்பாக எங்களிடம் பயிற்சிக்கு வரும் பங்கேற்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த வரையில் பதில் சொல்லி வந்தேன் கடந்த எட்டாண்டு காலத்தில் என்னிடம் கேட்கப் படாத கேள்வி ஒன்று இம்மாதம் கேட்கப் பட்டது. “ காந்தியின் வாழ்வில் அவரோடு இணைந்தவர்களின் படங்கள் இவ்வளவு இருந்தும் இதில் அம்பேத்கரோ.. பெரியாரோ இல்லையே... ஏன்?” திருவலங்காட்டில் இருந்து வந்த கோடீஸ்வரி என்ற பணியாளர் கேட்ட கேள்வி இது.
இந்த கேள்விக்குப் பிறகு நான் மீண்டும் காந்தி அருங்காட்சியகத்தைச் சுற்றி வந்தேன். பாவாடை சட்டைபோட்ட இந்திரா பிரியதர்ஷினி கூட காந்தியோடு இருக்கும் படம் இருந்தது.... பெரியாரையோ... அம்பேத்கரையோ காணவில்லை.
இந்த சம்பவம் நடந்த நான்கு நாட்கள் கழித்து காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளும், நான் பணி புரியும் நிறுவனத்தின் தொடக்க நாளும் ஒன்றாக இருப்பதால் அந்நாளை நாங்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த கொண்டாண்டத்தின் ஊடாக எங்கள் சக பணியாளர் தயாரித்த காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. இதிலும் பெரியாரோ... அம்பேத்கரோ இல்லை. (சின்ன வயசு இந்திரா பிரியதர்ஷினி இதிலும் இருந்தார்)
நிச்சயம் காந்தி பாகுபாடு காட்டி யாருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக நான் வாசித்தவரையில் அறியவில்லை. அப்படியெனில் இந்த வரலாற்றுத் தவறுகளைத் திட்மிட்டுச் செய்தவர்கள் யார்.....? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

வலி மிகும் இடங்கள்

எங்க தமிழ் அய்யா, தமிழிலக்கணத்தை இந்த மாதிரி சொல்லிக்கொடுத்திருந்தா பெரிய புலவனாயிருப்பேன்....

கள்வரே கள்வரே என்று சன்னமான குரலில் ஷ்ரேயா கோஷல் கொஞ்சிக்கொண்டிருக்க தினேஷ் கணினித் திரையில் கவனமாக இருந்தான். “ஏண்டா,இலக்கணம் அவ்வளவு பிடிச்சுப் போச்சா. இந்த பாட்டையே கேட்கற” என்றபடியே அவனை இழுத்தான் சுரேஷ்.
“இதில் என்னடா இலக்கணம்?”
“இந்த பாட்டோட வரிகளை முழுசாக் கேட்டு இருக்கியா? வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதேன்னு வைரமுத்து எழுதி இருக்காரு. அப்படின்னா என்ன தெரியுமா?”
“நீயே சொல்லிடுடா”
“ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்லறேன். இடைத்தேர்தல் தெரியுமா?”
“ஆமாம் எதாவது தொகுதியில் எம்பி எம்எல்ஏ இறந்துட்டா வைப்பாங்க”
“அதே! ஆனா அதையே இடை தேர்தல்ன்னு சொன்னா?”
“ஆஹா! அந்த காலத்து சிம்ரன் அக்கா சிம்பிளா ஜெயிப்பாங்களே.”
“பார்த்தியா, ஒரு சின்ன த் எப்படி ஒரு வித்தியாசம் காட்டுதுன்னு. இதைத்தான் சொன்னேன். நீ பாட்டு கேட்கும்பொழுது.”
“இதுக்கும் அந்தப் பாட்டுக்கும் என்ன சம்பந்தம்?”
“இந்த மாதிரி கூடுதலா வர எழுத்துகள் நாலே நாலுதான் – க், ச், த், ப். இது நாலுமே வல்லின எழுத்துகள்தான் பார்த்தியா. அதனால இது கூடுதலா வரும் இடங்களை வலி மிகும் இடங்கள் அப்படின்னு சொல்லுவாங்க.”
“இது கூடுதலா வரக்கூடாத இடங்கள்தான் வலி மிகா இடங்களா?”
“அதே! இப்போ புரியுதா வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே அப்படின்னா என்னன்னு”
“தமிழுக்குத் தெரிஞ்சா என்ன புண்ணியம். என்னை மாதிரி ஆளுங்களுக்குத்தானே தெரியணும். இல்லை நாங்க எழுதறதைப் பார்த்தா தமிழுக்குக்கூட தமிழ் மறந்து போயிடும்.”
“இதுக்கு ரொம்ப ஈசியா ஒரு வழி இருக்கு. மு. வரதராசன் அப்படின்னு ஒரு பெரியவர். நிறைய கதை கட்டுரை எல்லாம் எழுதினவரு. அவரு என்ன சொல்லி இருக்காரு தெரியுமா? சொல்லிப் பார், புரிந்து கொள் அப்படின்னு சொல்லி இருக்கார். அதாவது சொல்லிப் பார் அப்படின்னு சொன்னா அங்க ப் வருது. புரிந்து கொள் அப்படின்னு சொன்னா வரலை. சிம்பிளா ஒரு விதிமுறை வேணுமுன்னா அந்த வார்த்தைகளை உச்சரித்துப் பாரு. அப்பவே அங்க வலி மிகுமா மிகாதான்னு தெரியும் அப்படின்னு சொல்லறாரு.
அதாவது, உச்சரிப்பில் முதல் வார்த்தையோட கடைசியில் ஒரு அழுத்தம் இருந்தா அங்க வலி மிகும். உதாரணமா தங்க மகன் அப்படின்னு சொன்னா நடுவில் இல்லாத அழுத்தம் தங்கக்கட்டி அப்படின்னு சொன்னா வருது பாரு.”
”ஆனா இது ஒரு trial and error மாதிரி இருக்கே. இதுக்குன்னு விதிமுறை எல்லாம் கிடையாதா?”
”இல்லாமலா? சொல்ல ஆரம்பிச்சாத் தாங்க மாட்ட. அவ்வளவு இருக்கு. ஆனா இருக்கிறது எல்லாத்தையும் பத்திப் பேசாம நமக்கு இப்போ தேவையா இருக்கிறதைப் பத்தி மட்டும் சொல்லறேன். முதலில் சொன்ன மாதிரி இந்த மாதிரி கூடுதலா வரக்கூடிய எழுத்துகள் க், ச், த், ப் என்ற நான்கு எழுத்துகள்தான். அதனால இரண்டாவதா வர வார்த்தை இந்த நாலு மெய் கொண்ட உயிர்மெய் எழுத்தில்தான் ஆரம்பிக்கணும். புரியுதா?”
“க், ச், த், ப் – ஞாபகம் வைக்க ஒரு நல்ல ஐடியா வேணுமே! கட்டி ச் தரும் பெண் அப்படின்னு ஞாபகம் வெச்சுக்க வேண்டியதுதான்!”
“வேற நினைப்பே கிடையாதாடா உனக்கு?! காப்பி சூடாகத் தரும் பேரர் அப்படின்னு கூடத்தான் சொல்லலாம். அதனாலதான் நாம முன்னாடி பார்த்த உதாரணத்தில் தங்கக்கட்டியில் மிகுந்த வலி, தங்க மகன் என்றபொழுது மிகாமல் ஆச்சு.”
“புரியுது. இரண்டாவது வார்த்தை கசதப மாதிரி உயிர்மெய் கொண்டு தொடங்கலைன்னா வலி மிகாது. ஓக்கே. அப்புறம்?”
“இனிமே என்ன செய்யப் போறேன்னா, இதுக்கு நிறைய விதிகள் இருக்கு. அதோட டெக்னிகல் மேட்டரை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, எவ்வளவு சிம்பிளாச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்லறேன். சரியா? முதல்ல, எதையா குறிப்பிட்டு சொல்லும்பொழுதோ, கேட்கும்பொழுதோ நாம அந்த, இந்த, எந்த அப்படின்னு எல்லாம் கேட்கறோம் பாரு. இப்படிச் சொல்லும்பொழுது வலி மிகும்.
“உதாரணமா கொத்தனார் நோட்ஸ் நல்லா இருக்கு அப்படின்னு சொல்ல, இந்தப் பத்தி நல்லா இருக்குன்னு சொல்லணும். நானே நாளைக்கு ஒரு புத்தகம் எழுதினா அந்தப் புத்தகமும் நல்லா இருக்கு அப்படின்னு சொல்லணும். யாராவது எந்தப் புத்தகம்ன்னு கேட்டா எல்லாம் இந்தக் கொத்ஸ் எழுதின புக்குதான்னு சொல்லணும்.”
“அடப்பாவி, ரெண்டு வாரம் எழுதலை… அதுக்குள்ள புத்தகத்துக்குப் போஸ்டரா? ஆனா சொன்ன மேட்டர் புரியுது. அந்த, இந்த, எந்த அப்படின்னு வந்தா வலி மிகும்.”
“அந்த, இந்த மட்டுமில்லை, அந்தக் காலம் என்பதை அக்காலம்ன்னு சொல்லுவாங்க. இந்தப் படத்தை இப்படம்ன்னு சொல்லுவாங்க இல்லையா. இந்த மாதிரி அக்காலம், இப்படம், எக்கணம் அப்படின்னு சொல்லும்பொழுதும் வலி மிகும். அது மட்டுமில்லை அப்படி, இப்படி, எப்படி, அந்த, இந்த, எந்த – இது எல்லாம் வந்தால் கூட வலி மிகும்.”
“அது தெரியுமே. அதான் அப்படி ப் போடு போடு தன்னாலே அப்படின்னு இளைய தளபதியே சொல்லி இருக்காரே! அப்படி ப் போடாதே போடாதேன்னு சொல்லலையே! எனவே, அப்படி என்று வந்தால் வலி மிகும் மை லார்ட்!”
“தலையெழுத்து! உனக்கெல்லாம் இலக்கணம் சொல்லிக் குடுக்கக் கிளம்பினேன் பாரு, எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.”
“கோச்சுக்காதேடா! இப்படி எல்லாம் கொஞ்சம் தமாஷ் செஞ்சா எனக்கு நல்லா நினைப்பில் இருக்கும்டா. அதான் அப்படி எல்லாம் நடுவில் சொல்லிக்கிறேன். நீ மேல சொல்லு.”
“அடுத்ததா நாம முன்னாடி குற்றியலுகரம் பார்த்தோம் ஞாபகம் இருக்கா? அந்த மாதிரி குற்றியலுகர வார்த்தைகளுக்குப் பின்னாடி க்ச்த்ப் போன்ற மெய்யில் தொடங்கும் வார்த்தைகள் வந்தாலும் வலி மிகும். ஏண்டா குழப்பறன்னு நீ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லறேன். பாட்டுப் பாடு.”
“நீயே பாடா படுத்தற. இதில் நான் வேற பாட்டுப் பாடணுமா?”
“உன்னைப் பாடச் சொல்லலைடா. பாட்டுப் பாடுன்னு குற்றியலுகரத்துக்குப் பின்னாடி எப்படி எக்ஸ்ட்ரா மெய்யெழுத்து வருது பாருன்னு எடுத்துக்காட்டினேன்.”
“நல்லாக் காட்டின போ! தேக்கு மரம் அப்படின்னு சாதாரணமா வந்தாலும் தேக்குப் பலகை அப்படின்னு மாறிடும். காரணம் மரம் நம்ம கசதப சூத்திரத்தில் இல்லை ஆனா பலகை இருக்கு. சரியா?”
“ரொம்பச் சரி. இவ்வளவு நேரம் சொன்னதைக் கொஞ்சம் சேர்த்துச் சொல்ல வந்தா – அந்தத் தேக்குப் பலகை – இதுல அந்த பின்னாடியும் சரி, தேக்கு பின்னாடியும் சரி, வலி மிகுந்து வந்திருக்கு பாரு. ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு. எல்லாக் குற்றியலுகரத்துக்குப் பின்னாடியும் வலி மிகாது. அந்தக் குற்றியலுகரத்துக்கு முன்னாடி ஒரு வல்லின மெய் இருக்கணும். அதாவது தேக்கு, பாட்டு, பேச்சு, காட்டு இப்படி வரணும். அதில்லாம ஒரு மெல்லின எழுத்து வந்தால் பொதுவா வலி மிகாது.”
“பொதுவான்னா? அப்போ அங்கவும் எதாவது எக்ஸெப்ஷன் இருக்கா?”
“இருக்கே. சில சமயங்களில் குரங்குக்குட்டி, மருந்துக்கடை, பாம்புப்புற்று இப்படி சில இடங்களில் மட்டும் வலி மிகுந்து வரும். நான் முன்னாடி சொன்ன மாதிரி இந்த வார்த்தைகளை உச்சரிக்கும்போதே இங்க வலி மிகும் அப்படின்னு ஈசியாத் தெரியும்.”
“ம்ம்.”
“என்னடா சத்தமே அமுங்கிப் போச்சு? இன்னிக்கு கொஞ்சம் ஓவர் டோஸ் ஆச்சோ?”
”ஆமாண்டா. என்னமோ ரொம்பக் கேட்டுட்ட மாதிரி இருக்கு.”
“சரி, இன்னிக்கு இதோட நிறுத்திக்கலாம். போறதுக்கு முன்னாடி இன்னிக்குத் தெரிஞ்சுக்கிட்டதைப் பார்க்கலாமா?”
“ம்ம்.”
“பாயிண்ட் பாயிண்டாச் சொல்லறேன்.
* ரெண்டு வார்த்தைக்கு நடுவில ஒரு மெய்யெழுத்து எக்ஸ்ட்ராவா வந்தா அப்போ வலி மிகும் அப்படின்னு சொல்லறோம். * க் ச் த் ப் – இந்த நாலு மெய்யெழுத்துதான் எக்ஸ்ட்ராவா வரும் * எதாவது ஒண்ணைக் குறிப்பிட்டுச் சொல்லும்பொழுது வலி மிகும் – அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி * வல்லினத்தைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரத்தோட சேரும்பொழுது வலி மிகும் – பாட்டு, காட்டு, பேச்சு, மூச்சு * சில சமயங்களில் மட்டும் மற்ற குற்றியலுகரத்துக்குக் கூடவும் வலி மிகும் – மருந்து பாம்பு குரங்கு கன்று”
”நாலஞ்சு பாயிண்ட்தான் சொல்லி இருக்க. அதுக்கே மூச்சு முட்டுதே.”
“ நிதானமாப் போகலாம். என்ன அவசரம். மீதியை அடுத்த வாட்டி சொல்லித் தரேன். இப்போ வா, போய் வேலையைப் பார்க்கலாம்
(இணைய தளக்கட்டுரை)

Tuesday, March 2, 2010

எனது கவிதைகள்.....

எல்லோருக்குள்ளும் ஒரு கவிஞன் கண்டிப்பாக இருப்பான். கவிதை தனிமனித சொத்தல்ல.... அது அனைவருக்கும் பொதுவானது. எனது இளம் வயதில் பேனா பிடித்து எழுதத் தொடங்கியதே கவிதையால்தான். கலைஞரும், மு. மேத்தாவும் என்னைக் கவிதை எழுதத் தூண்டியவர். இலக்கியத்தை என்க்கு அறிமுகம் செய்தவர் எனது ஆசான் சுதந்திரன்தான். முதன்முதலில் அக்னிக்குஞ்சு என்ற சிற்றிதழைத் தந்து அதில் என்னை எழுதத் தூண்டினார். அதன் பிறகு நிறைய சிற்றிதழ்களில் எழுதினேன். சிற்றிதழ் நடத்தும் பணியையும் செய்தேன். எனது கவிதைகளை நண்பர் மு. முருகேஷ் மூலமாக “ சின்னச் சின்னக் கோபங்கள்” என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டேன். கடந்த பத்தாண்டுகளில் கட்டுரைகளையெ அதிகம் எழுதியுள்ளேன். கவிதைகள் எழுதியது மிகமிகக் குறைவு.
அத்தி பூத்தாற்போல் எழுதிய கவிதைகள் சில இதழிகளில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட... வெளியிடப்படாத கவிதைகளையும் இணைத்து இதில் தந்துள்ளேன்

நிறம் மாறும் கிராமங்கள்.......

மூன்று பக்கங்களிலும்கடல் நுரைகள் தாலாட்ட....குறுக்கும் நெடுக்கும் ரத்த நாளங்களாய்ஆறுகள் ஈரம் பாய்ச்ச...இதயமாய் துடித்துக் கொண்டிருக்கும் - எம்இந்திய பூமியில் இன்றுஆறுகள் எல்லாம் அந்நியப் பட்டுப் போனது.
ஆறுகள் அந்நியப் பட்டதால்ஆற்றங்கரை நாகரீகங்கள்அழிந்து கொண்டிருக்கின்றன....
பாவம் விவசாயி...எந்திரங்களின் வேகத்திற்கும்.இயற்கையின் மாற்றத்திற்கும்ஈடு கொடுக்க முடியாமல்கட்டை வண்டியின் மசகாய் மசிந்து கொண்டிருக்கிறான்...
மண்ணிலும் உரமின்றி நெஞ்சிலும் உரமின்றிகாடே பரதேசமேன்றுபஞ்சம் பிழைக்கப் போய்க் கொண்டிருக்கிறான்....
தானியங்கள் விளைந்த நிலங்களில்தானியங்கி எந்திரங்கள்குழி தோண்டிக் கொண்டிருக்கின்றன...அகலச் சாலைகளிக் கடவாய் பற்களுக்குள்பல கிராமங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகி விட்டன.....
தென்றல் வந்து விளையாடிய நதிகளில்பன்றிகள் புண்டு கொண்டிருக்கின்றன...இந்த நாகரீக சமூகத்தில்நதிகளெல்லாம் சாக்கடைகளாய்சலவை செய்யப்பட்டு விட்டன.விதவிதமாய் பறவைகள்விளையாடும் கானகங்கள் காணாமல் போய்விட்டன...
பறவைகளின் குடிலானதாய்மரங்களையெல்லாம் வெட்டிய மனித கூட்டம்வெட்டுவதற்கு ஒன்றுமில்லாமல்தன்னைத் தானே வெட்டிக்கொள்கிறது.....
ஊருக்கு ஊர் விரிந்து கிடந்த நெற்களங்களிலெல்லாம்சாதிக் கொடிகள் பறக்கின்றன.....
வாழும் பூமியில் வளங்களை இழந்துவாழ்ந்த மனிதர்களின் முகங்களை மறந்து.....தளர்ந்து போன வேளாண்மையால்மெலிந்து கிடக்கின்றன கிராமங்கள்....
மயிலும் குயிலும் மொழி பயிலும் பறவைகளுமாய் கொஞ்சிக் கிடந்த கானகம் யாவும் காய்ந்து விட்டது...
உணவுக்கு நெல் தந்த வயல்கள்புற நகரங்களாய் உருமாறி விட்டன...
இப்போதெல்லாம் எல்லா கிராமங்களிலும்கம்மங்கூழ் டம்ளர் ஐந்து ரூபாய்க்கும்குடி தண்ணீர் பாட்டில் பதினைந்து ரூபாய்க்கும்தாராளமாய் கிடைக்கிறது.....
கம்பும் கேள்வரகும் மேல்த்தட்டு உணவானதால்ரெண்டு ரூபாய் அரிசிக்கு வரிசையில் நிற்கின்றனநவதானிய கிராமங்கள்.....
இந்த எதிர்பரிணாமத்தால்எல்லா நிலையிலும் கிராமங்கள் நிறம் மாறிக் கொண்டிக்கின்றன...
................... ,,,,,,,,,,,,,,,,,,,,,, .....................................

அது தணிக்கும் வாய் நாடி


காலங்களுக்குத் தகுந்த கீரைகள்

பாட்டியின் சமையலில் ராஜாங்கம் செய்யும்.

ஐப்பசி கார்த்திகையில் மே காட்டில் புடுங்கிய

தட்டாங் கொழுந்தும் சணம்புப் பூவுமாய்

தாழித்து தாழித்து நாக்கில் எச்சில் வளர்ப்பாள்.....

மணக்க மணக்க தைவாளை புடுங்கி

மசால் சேர்த்து கூட்டு வைத்து தாத்தாவுக்கு தனியாய் கொடுப்பாள்.

வாய்வுக்கு நல்லது ஏன்று சொல்லுவாள்...

வாய்ப்புண் வந்த மூணாவது சித்தப்பாவுக்கு

அகத்திக்கீரையை வதக்கி வதக்கி

தாய்மையோடு சாரெடுத்துக் கொடுப்பாள்......

அரைக்கீரையும் தண்டாங்கீரையும்

மந்தைத் தோட்டத்துப் பாத்திகளில்

எப்போதும் பசை பசைத்து நிற்கும்.......

நெய்யுருக்கும் போதெல்லாம் முருங்கை இலை போட்டு

மணக்க மணக்கப் பொறித்து

எங்களுக்குத் தந்து திங்கச்சொல்லுவாள்....

சிறுபாணாற்றுப் படையின் உப்பிலாக் கீரையை வாசிக்கும்

போதெல்லாம் பாட்டி சமைத்த குப்பைக் கீரைதான்

செய்யுளின் வரிகளில் உட்கார்ந்து பாடம் நடத்தும்......

கம்மஞ்சோற்றுக்கு பசலிக்கீரை கடைந்து

இண்டங்கீரை வெஞ்சனம் வைப்பாள்

கீரைகளை சோற்றோடு சேர்த்து வந்தால்

குடல் நோய் வராது என்பது பாட்டி வைத்தியம்.

மருந்துக்கும் மாத்திரைக்கும்

கட்டுப்படாமல்கொப்பளித்து நிற்கிறது என் வாய்ப்புண்.......

மகிழி பூத்த காடுகளில் மாளிகைள் முளைத்துக் கிடக்கிறது.நோய்தணிக்கும் வாய்நாடிய ஊணவுப் பழக்கம்பாட்டியைப்போல படுக்கையில் கிடக்கிறது.

நோய்தணிக்கும் வாய்நாடிய உணவுப்

பழக்கம்பாட்டியைப்போல படுக்கையில் கிடக்கிறது.


தளரும் வேளாண்மை
டிராக்டர்களின் வரவை ஏதிர்பார்த்துகாட்டில் கிடக்கிறார்இயிரம் மாட்டு ஆழகர்சாமி…
ரேசன் கடையில் கூப்பன் நீட்டுகிறார் வயல்காட்டுப் பெரியசாமி…
பெருமாள் கோவில் புளியோதரைக்குக் காலையிலிருந்து காத்திருக்கிறார் புளியங்குடி பழனிச்சாமி….
புழுதி பறக்கும் பொட்டல் காடுகளில் தப்பிய தாவரங்களில் இடு மேய்க்கிறார் இட்டுக்கார பெருமாள்சாமி…
வறட்சி தாண்டவமாடும் கரிசல் பூமியில் மழை பெய்வதும் கண்மாய் நிரம்புவதும் கனவாய் போய்விட்டது…
இவணியில் விதைவிதைத்து ஒப்பசியில் தட்டப்பயறும், மாசியில் பாசிப்பயறும் மார்கழியில் சாமையும், தையில் சோளமும் ஏன நாளெல்லாம் மகசூல் தந்த கரிசல்பூமி கந்தகபூமியாகிவிட்டது.
பூமியை மலடாக்கிக் கொண்டிருக்கும் புண்ணியவான்களுக்கு ஏன்ன தண்டனை தரப்போகிறோம்?


சாயம் போகும் நதிகள்
அழுகல் வாடையோடு மெலிந்து கொண்டிருக்கிறது நதி......
பவர் சோப்பும் ரின் நுரையுமாய் நிறம் மாறிக்கொண்டது தண்ணீர்.....
தோலும் ரோமமும் குடலுமாய் குப்பையைக் கொட்டிச் செல்கிறான் பிராய்லர் கடை கருப்பசாமி........
நாயும் பன்றியும் புரண்டு பிரண்டு நாறிப்போனது படித்துறை. எத்துப் போட்டு தண்ணீரெடுத்தால் கோழியின் கவுச்சி குடல் புடுங்குகிறது....
இற்றை மறித்து வாய்க்கால் கட்டுகிறார் ரெங்கசாமி பண்ணையார்.
எர்ச் சாக்கடையும் சாயத் தொழிற்சாலைக் கழிவும் நதியை நிரப்பிக்கொண்டது.....
பாலத்தைக் கடக்கும் போதெல்லாம் மூக்கைப் பிடித்துக் கொள்கிறோம்......
ஈருகரை நாணலையும் நனைத்துக் கொண்டு கருப்பும் சிவப்புமாய் குதியாளம் போட்டு ஃடிக்கொண்டிருந்த நதியில்.....
துள்ளி விளையாடியதும் மீன் பிடித்துத் தின்றதும் பாலம் கடக்கும் போதெல்லாம் கனவாய் வந்து வந்து செல்கிறது.












Friday, February 26, 2010

ஜானகிராமனுக்கு.... எழுதிய கடிதங்கள்

நுழைவு வாயில்...

நான் தானம் அறக்கட்டளையில் பணியாளனாக என்னைத் திணித்துக் கொண்ட பிறகு எனக்கான நண்பர்களின் வட்டம் இங்கும் உருவானது. எனது வாழ்வில் கடமலையில் நான் பார்த்திராத... எனக்கு கிடைத்திடாத புதிய அனுபவங்கள் இங்கு கிடைத்தது. எல்லோரும் சமம் என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டாலும் இங்குள்ள ஏற்றதாழ்விற்கு அளவேயில்லை. தொழில்நுட்பம் படித்த பட்டதாரிகளுக்கு இங்கு கிடைக்கும் ஊதியமும், பதவி உயர்வுகளும் பிறருக்கு இல்லை. (இது பெரிய கதை . இதை தனியே எழுத உள்ளேன்.) இப்படிப்பட்ட சூழலிலும் பணி எல்லைகள் தாண்டி நட்பு வட்டத்தில் இணைந்தவர்களில் ஜானகிராமன் முதன்மையானவர். அவருக்காக பல கடிதங்களை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவருக்காக எழுதிய கடிதங்களை இதில் தொகுப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கடிதம்- 1 (4-12-2009)
இனிய நண்பர் ஜானகி, வணக்கம்.

இன்று உங்களோடு பேசும் சூழல் ஏற்படாமல் போனது. மனதுக்கு சங்கமமாக உள்ளது.

கடந்த ஒரு வார காலமாகவே ஏகப்பட்ட மன உளைச்சலில் இருந்து கொண்டிருக்கிறேன்.
ஒரு பக்கம் பயிற்சி மையத்தில் பயிற்றுநர் என்று எல்லோரிடமும் தம்பட்டமடித்து விட்டு, இன்னொரு பக்கம் நாங்கள் எங்களை விட அதிக ஊதியம் வாங்குபவர்களுக்கு உதவியாளர்களாகவே இருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் அப்பட்டமான வெளிப்பாடுதான் இந்த பத்து நாள் பயிற்சியில் கலைச்செல்விக்கு உதவியாளராக இருப்பதும், சென்ற ஆண்டு நாகேஸ்வரிக்கு கண்ணன் உதவியாளராக இருந்ததும்.

நேற்று கண்ணன் வகுப்பெடுக்கவில்லை என்பதற்காக என்னையையும் கண்ணனையும் பற்றி தனது தோழியிடம் ஒருமையில் திட்டித் தீர்த்துள்ளார். இதை நானோ.. கண்ணனோ செய்ய நினைத்திருந்தாலே எங்கள் மீது 356 வது பிரிவு பாய்ந்திருக்கும்.

எல்லா நதிகளையும் ஏற்றுக் கொள்ளும் சமுத்திரம் போல எல்லா அடக்கு முறைகளையும் ஏற்றுக் கொள்ள பழகிக் கொண்டாலும் அவ்வப்போது கொஞ்சம் தன்மானம் எட்டிப் பார்க்கிறது. தன்மானத்தோடு இருக்க நினைத்தால் வாழ முடியாது என்பது தெரிந்தும் கொதிப்படைவதும், அதற்குத் தீர்வில்லாத போது சோர்ந்து போவதும் வாடிக்கையாகி விட்டது.

இலக்குகளற்ற பயணங்களில் சிலர் வென்று விடுகிறார்கள். அந்த சிலரை நினைத்துக் கொண்டு பலரும் இலக்குகளற்று பயணம் செய்து கண்டதுக்கெல்லாம் பலியாகி விடுகிறார்கள். நானும் கண்ணனும் அப்படிப்பட்ட பலியாடுகளே... எங்களுக்குள் முட்டிக் கொண்டும் இருவரும் இணைந்து பல பொதிகளைச் சுமந்து கொண்டும் இலக்குகளற்ற பயணத்தில் அலைந்து கொண்டிருக்கிறோம். ஆங்காங்கே கிடைக்கிற சில இளைப்பாறுதலைப் போலவே தாங்களைப் போன்ற நண்பர்களின் உதவியும் அமைகிறது.

வாய்ப்புக் கிடைக்கும் போது பேசுவோம்.

தொடர் பயணத்தில்...

இரா. தங்கப்பாண்டியன்
கடிதம்-2 (7-12-2009)
இனிய ஜானகி, தங்களின் மின்னஞ்சல் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.

நட்பு கொள்ள விரும்பினாலும் நண்பர்களே கிடைக்காத ஏழைகளுக்கு நண்பர்களாய் இருங்கள் என்று கவிஞர் ஷெல்லி கூறுவார். தங்களைப் போன்ற நல்ல நண்பர்களைப் பெற்றதுதான் தானம் அறக்கட்டளை எங்களுக்கு வழங்கிய மிகப் பெரிய சலுகை.

இப்போது கூட நண்பர் பாலாஜி வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார். கடந்த நான்கு நாட்களில் இன்று எனக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைத்துள்ளது. கண்ணன் ஓய்வின்றி இன்றும் களப்பார்வைக்காக தனது மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.

தவிர இன்று இந்த கல்வி நிலையத்தின் தொடக்க நாள். ஏழாண்டுகள் முடிந்து எட்டாவது ஆண்டு தொடங்குகிறது. கற்பிக்கும் பணியில் எங்களுக்கேற்பட்ட சில பின்னடைவுகள் தவிர்த்து நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம்.

நிறைய முகங்கள் அறிமுகமாகியதும் இந்த ஏழாண்டுகளில்தான்...... உங்களைப் போன்று.. விஜியைப் போன்று.... ராஜாவைப்போன்று.... ஆசைமற்றும் ராஜ்குமார் போன்ற நட்பு வட்டம் கிடைத்ததும் இந்த ஏழாண்டுகளில்தான்.

தங்களின் நிர்வாகத்திற்கான ஆட்களைத் தேர்வு செய்ய வெள்ளைக்காரன் கொண்டு வந்த கல்வியை, தங்களின் தேச, அறிவு வளர்ச்சிக்குப் பயன் படுத்திக்கொண்ட இந்தியத் தலைவர்களைப் போலவே நானும் கண்ணனும் இந்த அனுபவங்களை எங்களின் சுய வளர்ச்சிக்கும், எங்களைப் போன்று அடித்தட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான நண்பர்களின் வளர்ச்சிக்கும் பயன் படுத்த எண்ணியுள்ளோம்.

எங்களது இந்த முயற்சியில் தங்களைப் போன்ற நண்பர்களும் இணைந்த வருவது ஆரோக்கியமானது. அதுவும் தானம் அறக்கட்டளை பணியாளர்களுக்கான ஊதியக் குழுவிற்கான தங்களின் பரிந்துரைக் கடிதம் பாராட்டத்தகுந்தது.

திறமைகளை.... தகுதியானவர்களை.... வளர்ச்சிப் பணிக்கான கருவியாக மாற்றும் நமது முயற்சியைத் தொடர்ந்து செய்வோம்.

தோழமையுடன்

இரா. தங்கப்பாண்டியன்
கடிதம்-3 (19-2 -2010)
அன்புள்ள ஜானகி, நலமா? வீட்டில் சுகமா? அலுவலகப்பணிகள் எப்படி உள்ளது?

என்னாச்சு? நீண்ட இடைவெளி விட்டது போலொரு பிரம்மை உள்ளது. கடந்த ஞாயிறு அன்று சென்னை சென்றேன். பசுமைத்தாயகம் கட்டுரையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தங்களுக்கு அலை பேசியில் முயற்சி செய்தேன் . கிடைக்க வில்லை. பிறகு மதுரை வந்து விட்டேன். மறுநாள் காலையில் தொடங்கி இப்போது வரையில் தொடர்பயிற்சிதான்.

இப்போது கூட கண்ணன் வகுப்பில் இருக்கிறார். சென்னை பயணம் பல அனுபவங்களைத் தந்தது. நல்ல முறையில் எங்களை உபசரித்தார்கள். பயணப்படியோடு கூட்டத்தில் கலந்து கொண்டதற்கான தொகையும் தந்தார்கள். இந்தாண்டு எனது எழுத்துப் பணியை தீவிரமாக்க இந்தப் பயணம் உதவியாக இருக்கும் என நம்பலாம்.

மற்றபடி இந்த இடைவிடாப் பயிற்சிப் பணிகள் உடலை சோர்வடையச் செய்கின்றன. படிக்கவோ.... எழுதவோ முடியவில்லை. அடித்துப் போட்டது போலொரு சோர்வு பிறக்கிறது. அடுத்த மாதமும் அதற்கடுத்த மாதமும் இது தொடரும்போலத் தெரிகிறது.

இந்ந ஆண்டில் எப்படியும் காவல் கோட்டம் வாசித்து விட வேண்டும் என எண்ணினேன். அது நடக்காமல் அது நடக்காமல் விட்டது

மற்றபடி ஏதுமில்லை. நேரமிருந்தால் அலைபேசியில் தொடர்பு கொள்ள முயலுகிறேன்.

நன்றி

தோழமையுடன்

இரா. தங்கப்பாண்டியன்
கடிதம்-4
இனிய ஜானகி தங்களின் மின்னஞ்சல் வாசித்தேன்... மிக்க மகிழ்ச்சி. குல தெய்வ வழிபாடு அடுத்த தலைமுறைக்கு இருக்குமா என்பதே தெரியவில்லை. எனது குடும்பத்தில் எனக்கு நினைவு தட்டய காலத்திலிருந்தே குல தெய்வ வழிபாடு இல்லை. தங்களின் அனுபவத்திற்குப் பிறகு நானும் எனது குலு தெய்வத்தைத் தேட வேண்டும்.

பசுமைத்தமாயகத்தில் தாங்கள் அவசியம் எழுத வேண்டும். அதிலும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தின் சிறப்புகளை விரல் நுனியில் வைத்துள்ள தாங்கள் அதைப் பதிவு செய்ய வேண்டும் அதற்கான தளமாக பசுமைத்தாயகம் விளங்கும். முடிந்தால் இம்மாதமே ஒரு கட்டுரையை அனுப்புங்கள். அங்கு படைப்புக்கான பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

நன்றி

தோழமையுடன்

இரா. தங்கப்பாணடியன்
கடிதம்-5 (20-2-2010)
நன்றி ஜானகி, தெருக்கூத்துக் கலைஞர்கள் மட்டுமல்ல பல முன்னாள் அரசியல் அப்பாவிகளும் இப்படி ஏதாவது ஒரு தொழிலில் தங்களைத் திணித்துக் கொண்டு ஜீவித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். தான் விரும்பிய, நேசித்த பணியை எல்லோருக்கும் காலம் தந்து விடுவதில்லை. எல்லோருக்குள்ளும் ஒரு தோல்வி உறங்கிக்கொண்டிருக்கும். ஆனால் அதையும் பாடமாக எடுத்துக் கொள்பவர்களே சாதனை படைக்கிறார்கள்.

அடுத்த வகுப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்

நன்றி

தோழமையுடன்

இரா. தங்கப்பாண்டியன்
கடிதம்-6 (23-2-2010)
இனிய ஜானகி தங்களின் மடலை இன்றுதான் வாசித்தேன். உண்மைதான் பலருக்குள்ளும் நிறைவேறாத ஆசைகள் இருந்து கொண்டேயிருக்கும். அது அடிக்கடி நம்மை நர்ச்சரிக்கும். எனது சின்ன வயதில் பெரும்பாலும் குடும்பத்தில் பேசிக் கொள்ளும் அரசியல் பேச்சுகளே என்னை ஈர்த்தது. எனது சித்தப்பாவுக்குத் திருமணமான பின் எனது சித்தி ஒரு நாள் என்னிடம் படித்து என்னவாகப் பொகிறாய்? என்று கேட்ட போது நான் எம். எல். ஏ. ஆக வேண்டும் என்று சொன்னேன் . நான் சொன்ன நாள் நேரம் மறந்து விட்டது. ஆனால் விசயம் மட்டும் இன்னும் இருக்கிறது. இது போல பலரும் சொல்லிக் கொண்டவையெல்லாம் என்னாச்சு?

“தமிழ் படிக்க நினைத்த என்னை
பொறியியல் படிக்க வைத்தார் அப்பா.....
பொறியியல் படிக்க நினைத்த என் மகளை
தமிழ் படிக்க வைத்தேன்..... “

என்ற கவிதைதான் எல்லாவற்றிற்குமான விடையாகிறது

பசுமைத் தாயகத்தில் தாங்களின் படைப்புகளை mailtopt@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும். அவசியம் தங்களின் படைப்பு அச்சேறும். கண்ணனையும் அனுப்பச் சொல்கிறேன். அவர் அனுப்பியபாடில்லை. பணத்திற்கு எழுதுவதைவிட எழுதியதற்குப் பணம் பெறுவது தவறில்லை என்பதே எனது கருத்து. இதில் கண்ணன் இன்னும் உடன்படவில்லை. எழுதுவது நிறுவன துரோகமோ... என்ற பயம் அவருக்குள் உள்ளது. அவருக்கு மட்டுமல்ல நண்பர் சிவக் குமார் கூட தனது பெயரில் எழுதாமல் புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறார். காரணம் தெரியவில்லை.

கடமலையில் குடியேறிய பிறகு மீண்டும் “வைகை““ இதழைத் தொடங்கலாம் என எண்ணுகிறேன். கணனி பற்றிய அறிவோ... ஊடகம் தொடர்பான முழு புரிதலோ இல்லாத 1996 -- 2000 ஆண்டுகளில் நாங்கள் இதழை நடத்தினோம். இப்போது இன்னும் கூடுதலாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

எது முடியுமோ அதைத் தொடர்ந்து செய்வோம். இணைந்து செய்வோம்

நன்றி

தோழமையுடன்

இரா. தங்கப்பாண்டியன்
கடிதம்-7 (24-2-2010)
இனிய ஜானகி நன்றி. வைகை தொடர்பாக நான் இன்னும் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்காத நிலையிலும் தங்களின் பாகிர்தல் நம்பிக்கையூட்டுகிறது.

தவிர தங்களின் வலைதளம் அறிந்தேன் இன்னும் வாசிக்கவில்லை. வாசித்து முடித்ததும் பின்னூட்டம் தருகிறேன். எனக்கான வலைதளம் தொடங்கும் எண்ணம் பாதியில் உள்ளது. இம்மாத இறுதியில் அதை நிறைவேற்ற வேண்டும். தங்களின் உத்துழைப்பு தேவை.

நன்றி

தோழமையுடன்
இரா. தங்கப்பாண்டியன்



கடித இலக்கியம்




நான் கிராமத்தில் பிறந்தவன். எனது சின்ன வயதில் பெரும்பாலான நாட்களை கிராமத்தில் கழித்தவன். எனது பள்ளி காலத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் வாழ்த்துகளை அனுப்பித்தான் கடித உறவுகளைப் பெற்றேன். பள்ளிக் கல்வி முடிந்த பிறது எனது நண்பர்கள் எல்லாம் கல்லூரிகளில் படிக்கப் போக நான் மட்டும் கிராமத்தில் இருந்து கொண்டு அஞ்சல் வழியில் படித்துக் கொண்டிருந்தேன்.இந்த கால கட்டத்தில் எனது நண்பர்களுக்காக நானும் எனக்காக எனது நண்பர்களும் எழுதிய கடிதங்கள் ஏராளம்.

1990 களில் தொடங்கி 2000 ஆண்டு வரையில் பத்தாண்டு காலத்தில் நாங்கள் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் ஏராளம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த பிறகு இலக்கிய நண்பர்களின் பழக்கமும், பிரபலமடைந்திருந்த எழுத்தாளர்களின் அறிமுகமும் எனக்குள் கடித ஆர்வத்தையும் எழுத்தாற்றலையும் உருவாக்கியது. நான் எழுத்தாளனாக மாற கடிதங்கள் எழுதத் தொடங்கியதே காரணமாக அமைந்தது. தினந்தோறும் நான்கு கடிதங்களாவது வரும். எங்களுர் அஞ்சலகத்தில் அப்போது பணியில் இருந்த ( இப்போதும் இருக்கிற) திரு. பி. நடராஜன் திட்டிக் கொண்டே கடிதங்களைக் கொண்டு வந்து கொடுப்பார்.

காலச்சுழற்சியில் வேறு வேறு இடங்களில் பணிகளும் கிடைக்க ஆளாளுக்குத் திருமணமும் நடக்க ஆளாளுக்கு ஒரு திசையில் பறந்து சென்று விட்டோம். முக்கிய நிகழ்வுகளில் சந்தித்துக் கொள்வதோடு நட்பு வட்டம் முடிந்து விடுகிறது.

நட்பு காலங்களில் ஆண் பெண் நண்பர்கள் கடிதம் எழுதிக் கொண்ட போதிலும் நட்பு காதலாக மாறும் போது காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் அன்பின் தூதாகவே கடிதங்கள் விளங்கின. ஒரு காலத்தில் காதல்கொண்டோரின் தூதுவராகக் கருதப் பட்டார்கள் தபால்காரர்கள். காதலித்துப்பார் தபால்காரன் கடவுளாகத் தெரிவான் என்று வைரமுத்து சொன்னது அனுபவமொழியே.

இப்போது அலைபேசிகளின் வருகைக்குப் பிறகு கடிதம் எழுதுவதும் குறைந்து விட்டது. தோ்வுகளுக்கான அனுமதிச் சீட்டு பெறவும் திருமண அழைப்பிதழ்கள் பெறவும் மட்டுமே அஞ்சல் துறை பயன்படுத்தப்படுகிறது. காதலர்களின் கடவுளாக ஒரு காலத்தில் கருதப் பட்ட தபால்காரர்கள் இன்று முதியோர் ஓய்வு ஊதியம் பெறுவோர்களின் கலங்கரை விளக்கமாக மாறி விட்டார்கள்.



கடிதங்களுக்கான காலம் முடிந்து விட்டதா? இந்தியாவின் தேசத் தந்தை என அழைக்கப்பட்ட காந்தியும், நவ இந்தியாவின் சிற்பி என அழைக்கப்பட்ட நேருவும் எழுதிய கடிதங்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவையல்லவா.... அண்ணா தனது தம்பிகளுக்காக எழுதிய கடிதங்கத்தானே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தது. தமிழறிஞர் மு.வ. கடித இலக்கியத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் தம்பிக்கு தங்கைக்கு நண்பர்க்கு செய்திகளையும் அனுபவங்களையும் அன்றைய சமூக அவலங்களையும் பதிவு செய்தாரே......வி.ஸி. காண்டேகரின் கிரௌஞ்ச வதம் என்ற நாவலில் வரும் நாயகன் திலீபன் தனது பேராசிரியருக்கு எழுதிய விருவிருப்பான 22 பக்கக் கடிதம்தான் அந்த நாவலின் இதயமான இன்றும் விளங்குகிறது.

கடிதங்களுக்கான காலம் முடிந்து விட்டது என்று நினைப்பது வரலாற்றுப் பிழை. கடித உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நமது கடமை.

உறவை, வரலாறை, நட்பை, காலத்தை உணர்த்துவது கடிதங்கள். வெறும் நல விசாரிப்புககளோடு மட்டும் முடிந்து போவதல்ல கடிதங்களின் பணி. எந்த காலகட்டத்தில் எழுதினோமோ அந்த கால கட்டத்தின் பண்பாடு கலாச்சாரத்தைக் கோடிட்டுக் காட்டும் பணியையும் கடிதங்கள் செய்கின்றன.

கடிதங்கள் ஞாபகங்களின் பதிவேடு. எப்போதோ சாப்பிட்ட நெல்லிக்காய் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் இனிப்பதைப் போல கடிதங்கள் படிக்கும் போடிதல்லாம் நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்பவை.

காலந்தோறும் கடிதங்கள் பல்வேறு வடிவங்களைத் தாங்கி வந்த வண்ணம் உள்ளன. ஆதி காலத்தில் பனையோலைகளால் வந்தவை காகித காலத்தில் காகிதங்களில் வந்தன. இது மின்னியல் காலம் மின்னஞ்சலில் கடிதங்கள் வரத் தொடங்கியுள்ளன. எத்தனை நபர்களுக்கு மின்னஞ்சல் செய்யும் வசதியும் வாய்ப்பும் இருக்கிறது?

வசதிகளை வாய்ப்புகளை உருவாக்குவோம். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து கடி மரபைப் புதுப்பிப்போம்

எழுதுங்களேன்..

தோழமையுடன்

இரா. தங்கப்பாண்டியன்